பக்கம் எண் :

நட்பியல்170கலைஞர் உரை

846.

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி.
 

தமது  குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும்
உடை அணிவது மடமையாகும்.
 

847.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.
 

நல்வழிக்கான   அறிவுரைகளைப்    போற்றி   அவ்வழி    நடக்காத
அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.
 

848.

ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்.
 

சொந்தப்   புத்தியும்   இல்லாமல்  சொல்  புத்தியும்  கேட்காதவருக்கு
அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.
 

849.

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.
 

அறிவற்ற  ஒருவன்,  தான்  அறிந்ததை  மட்டும்  வைத்துக் கொண்டு,
தன்னை   அறிவுடையவனாகக்     காட்டிக்    கொள்வான்.    அவனை
உண்மையிலேயே  அறிவுடையவனாக்க   முயற்சி  செய்பவன்  தன்னையே
அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.
 

850.

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்

தலகையா வைக்கப் படும்.
 

ஆதாரங்களைக்  காட்டி   இதுதான்  உண்மை   என்று   தெளிவாகக்
கூறப்படுகிற  ஒன்றை,  வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப்
"பேய்"களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும்.