பக்கம் எண் :

திருக்குறள்171பொருள்

86. இகல்
 

851.

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்.
 

மனமாறுபாடு  காரணமாக  ஏற்படுகிற  பகையுணர்வு  மக்களை  ஒன்று
சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
 

852.

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை.
 

வேற்றுமை  கருதி  வெறுப்பான  செயல்களில்  ஒருவன் ஈடுபடுகிறான்
என்றாலும் அவனோடு கொண்டுள்ள  மாறுபாடு  காரணமாக  அவனுக்குத்
துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.
 

853.

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்

தாவில் விளக்கம் தரும்.
 

மனமாறுபாடு  என்னும்  நோயை  யார்   தங்கள்  மனத்தை  விட்டு
அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.
 

854.

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.
 

துன்பத்திலேயே  பெருந்துன்பம்  பகையுணர்வுதான்.  அந்த உணர்வை
ஒருவன்   அகற்றி  விடுவானேயானால்,  அது  இன்பத்திலேயே   பெரும்
இன்பமாகும்.
 

855.

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிகலூக்கும் தன்மை யவர்.
 

மனத்தில்  மாறுபாடான  எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல்
நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.