பக்கம் எண் :

திருக்குறள்175பொருள்

88. பகைத்திறம் தெரிதல்
 

871.

பகையென்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற் றன்று
 

பகை  உணர்வு  என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை
வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.
 

872.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.
 

படைக்கலன்களை  உடைய  வீரர்களிடம்கூடப்   பகை  கொள்ளலாம்.
ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை
கொள்ளக் கூடாது.
 

873.

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.
 

தனியாக  நின்று  பலரின்  பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம்
பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.
 

874.

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

தகைமைக்கண் தங்கிற் றுலகு.
 

பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான
பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.
 

875.

தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்

இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.
 

தனது  பகைவர்கள்  இரு  பிரிவினராக  இயங்கும் நிலையில் தனக்குத்
துணையாக  யாருமின்றித்  தனியாக  இருப்பவர்,  அந்தப்  பகைவர்களில்
ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.