பக்கம் எண் :

நட்பியல்180கலைஞர் உரை

896.

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
 

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்;
ஆனால்  ஆற்றல்   மிகுந்த   பெரியோரிடம்   தவறிழைப்போர்  தப்பிப்
பிழைப்பது முடியாது.
 

897.

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.
 

பெருஞ்செல்வம்   குவித்துக்கொண்டு   என்னதான்    வகைவகையான
வாழ்க்கைச்  சுகங்களை அனுபவித்தாலும்,  தகுதி  வாய்ந்த  பெரியோரின்
கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.
 

898.

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து.
 

மலை போன்றவர்களின்  பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள்,
நிலைத்த பெரும்  செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து
போய் விடுவார்கள்.
 

899.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.
 

உயர்ந்த   கொள்கை   உறுதி   கொண்டவர்கள்   சீறி    எழுந்தால்,
அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.
 

900.

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின்.
 

என்னதான்  எல்லையற்ற  வசதிவாய்ப்புகள்,  வலிமையான  துணைகள்
உடையவராக இருப்பினும்,   தகுதியிற்   சிறந்த  சான்றோரின்   சினத்தை
எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.