பக்கம் எண் :

திருக்குறள்181பொருள்

91. பெண்வழிச்சேறல்
 

901.

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது.
 

கடமையுடன்  கூடிய செயல்புரியக்  கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப்
பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
 

902.

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நாணாக நாணுத் தரும்.
 

ஏற்றுக்கொண்ட  கொள்கையினைப் பேணிக்  காத்திடாமல்  பெண்ணை
நாடி   அவள்  பின்னால்  திரிபவனுடைய  நிலை  வெட்கித்  தலைகுனிய
வேண்டியதாக ஆகிவிடும்.
 

903.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்

நல்லாருள் நாணுத் தரும்.
 

நற்குணமில்லாத  மனைவியைத்  திருத்த முனையாமல் பணிந்து போகிற
கணவன்,  நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக
நேரிடும்.
 

904.

மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.
 

மணம்  புரிந்து புதுவாழ்வின்  பயனை  அடையாமல்  குடும்பம் நடத்த
அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
 

905.

இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்.
 

எப்போதுமே     நல்லோர்க்கு     நன்மை    செய்வதில்     தவறு
ஏற்பட்டுவிடக்கூடாதே    என்று    அஞ்சுகிறவன்   தவறு     நேராமல்
கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.