கோட்டமமைத்ததும், குறளோவியம் தீட்டியதும் போல் இக்குறள் உரை வகுத்ததும் குறள் நெறி பரப்பும் பணியில் குறிப்பிடத்தக்க விழுமிய பணியாக அமைந்துள்ளது. பரிமேலழகர் முதலிய பழைய உரைகாரர்களும் திரு.வி.க., புரட்சிக்கவிஞர், மு.வ. போன்ற புத்துரைகாரர்களுமாகிய உரையாசிரியர் பற்பலருள் கலைஞர் தம் பணியால் தனித்துச் சிறக்கிறார். |
இவர் மரபுப் பொருள், சொற்பொருள், தெளிவுப்பொருள், சுருக்கப் பொருள் என்பன போன்ற முறையில் பொருள் கூறிச் செல்லாமல் இக் காலத் தமிழன் ஒரு குறளைப் படித்தால் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை இற்றெனக் கிளந்து, தெற்றெனக் காட்டுவதையே தம் உத்தியாகக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது. பரிமேலழகர், திரு.வி.க போன்ற சான்றோர் உரைகளெல்லாம் அவற்றுக்கேற்ற வகையில் பயன் விளைத்துள்ளன. இனியும் பயன் விளைக்க வல்லன; நம்மால் என்றும் பேணிப் போற்றத்தக்கன என்பதில் சிறு கருத்து வேறுபாடும் இல்லை. அவ்வாறே கலைஞர் உரையின் தேவை குறித்தும் கருத்து வேறுபாடு எழ இடம் இல்லை. தந்தை பெரியாரைப் புரட்சிக் கவிஞர் 'மக்கள் நெஞ்சின் மலிவுப்பதிப்பு' என்று சிறப்பித்துச் சொன்னார். அதையே நான் இங்கும் பொருத்திச் சொல்ல விழைகிறேன். திருக்குறள் கலைஞர் உரையும், மக்கள் நெஞ்சின் மலிவுப்பதிப்பாக வெளிவருகிறது. இச் சிறப்புப் பதிப்பை வெளியிடும் இத் திருப்பணியில் எனக்கும் |