பக்கம் எண் :

திருக்குறள்193பொருள்

97. மானம்
 

961.

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல்.
 

கட்டாயமாகச்  செய்து   தீர   வேண்டிய   செயல்கள்  என்றாலும்கூட
அவற்றால்  தனது   பெருமை  குறையுமானால்   அந்தச்   செயல்களைத்
தவிர்த்திடல் வேண்டும்.
 

962.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர்.
 

புகழ்மிக்க வீர  வாழ்க்கையை  விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ்
வரவேண்டு  மென்பதற்காக  மான  உணர்வுக்குப்  புறம்பான  காரியத்தில்
ஈடுபடமாட்டார்.
 

963.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.
 

உயர்ந்த   நிலை  வரும்போது  அடக்க   உணர்வும்,  அந்த   நிலை
மாறிவிட்ட  சூழலில்  யாருக்கும்  அடிமையாக  அடங்கி  நடக்காத  மான
உணர்வும் வேண்டும்.
 

964.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.
 

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து
தாழ்ந்திடும்போது,   தலையிலிருந்து    உதிர்ந்த   மயிருக்குச்   சமமாகக்
கருதப்படுவார்.
 

965.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.
 

குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி
அளவு   இழிவான  செயலில்  ஈடுபட்டால்   தாழ்ந்து   குன்றிப்   போய்
விடுவார்கள்.