பக்கம் எண் :

திருக்குறள்195பொருள்

98. பெருமை
 

971.

ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்

கஃதிறந்து வாழ்தும் எனல்.
 

ஒருவரின்  வாழ்க்கைக்கு  ஒளிதருவது  ஊக்கமே  யாகும். ஊக்கமின்றி
உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
 

972.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.
 

பிறப்பினால்  அனைவரும்   சமம்.   செய்யும்  தொழிலில்  காட்டுகிற
திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
 

973.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.
 

பண்பு  இல்லாதவர்கள்  உயர்ந்த பதவியில்  இருந்தாலும் உயர்ந்தோர்
அல்லர்;  இழிவான  காரியங்களில்  ஈடுபடாதவர்கள்  தாழ்ந்த  நிலையில்
இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.
 

974.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
 

தன்னிலை  தவறாமல்  ஒருவன்  தன்னைத்  தானே  காத்துக்கொண்டு
வாழ்வானேயானால்,  கற்புக்கரசிகளுக்குக்  கிடைக்கும் புகழும் பெருமையும்
அவனுக்குக் கிடைக்கும்.
 

975.

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை யுடைய செயல்.
 

அரிய  செயல்களை  அவற்றுக்கு  உரிய  முறையான  வழியில் செய்து
முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.