பக்கம் எண் :

திருக்குறள்197பொருள்

99. சான்றாண்மை
 

981.

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து 

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
 

ஆற்ற  வேண்டிய  கடமைகளை  உணர்ந்து,  அவற்றைப்  பண்பார்ந்த
முறையில்   நிறைவேற்ற   மேற்கொள்ளப்படும்  முயற்சிகள்  அனைத்தும்
நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.
 

982.

குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத் துள்ளதூஉ மன்று.
 

நற்பண்பு  ஒன்றே  சான்றோர்க்கான  அழகாகும். வேறு எந்த அழகும்
அழகல்ல.
 

983.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ

டைந்துசால் பூன்றிய தூண்.
 

அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல்,
இரக்கச்  செயலாற்றுதல்,  வாய்மை   கடைப்பிடித்தல்   ஆகிய   ஐந்தும்
சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.
 

984.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.
 

உயிரைக்  கொல்லாத  அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு.
பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.
 

985.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.
 

ஆணவமின்றிப்   பணிவுடன்   நடத்தலே,  ஆற்றலாளரின்   ஆற்றல்
என்பதால்  அதுவே பகைமையை மாற்றுகின்ற  படையாகச்  சான்றோர்க்கு
அமைவதாகும்.