பக்கம் எண் :

குடியியல்198கலைஞர் உரை

986.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.
 

சமநிலையில்  இல்லாதவர்களால்  தனக்கு  ஏற்படும்  தோல்வியைக்கூட
ஒப்புக்   கொள்ளும்    மனப்பக்குவம்தான்    ஒருவரின்    மேன்மைக்கு
உரைகல்லாகும்.
 

987.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.
 

தமக்குத்   தீமை   செய்தவருக்கும்   திரும்ப   நன்மை   செய்யாமல்
விட்டுவிட்டால்  சான்றாண்மை  எனும்  நல்ல  பண்பு இருந்தும் அதனால்
என்ன பயன்?
 

988.

இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.
 

சால்பு  என்கிற  உறுதியைச்  செல்வமெனக்  கொண்டவருக்கு வறுமை
என்பது இழிவு தரக் கூடியதல்ல.
 

989.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்

காழி யெனப்படு வார்.
 

தமக்குரிய  கடமைகளைக்  கண்ணியத்துடன்  ஆற்றுகின்ற  சான்றோர்
எல்லாக்    கடல்களும்     தடம்புரண்டு    மாறுகின்ற     ஊழிக்காலம்
ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
 

990.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை.
 

சான்றோரின்   நற்பண்பே   குறையத்தொடங்கினால்  அதனை  இந்த
உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.