பக்கம் எண் :

திருக்குறள்199பொருள்

100. பண்புடைமை
 

991.

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.
 

யாராயிருந்தாலும்  அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே
பண்புடைமை  என்கிற  சிறந்த   ஒழுக்கத்தைப்  பெறுவதற்கு   எளிதான
வழியாக அமையும்.
 

992.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.
 

அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு
உரியவராக  இருப்பதும்தான்  பண்புடைமை  எனக்   கூறப்படுகிற  சிறந்த
நெறியாகும்.
 

993.

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
 

நற்பண்பு  இல்லாதவர்களை  அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே
ஒப்பிட்டுப்  பார்த்து  மக்கள்  இனத்தில்  சேர்த்துப்  பேசுவது  சரியல்ல:
நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.
 

994.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.
 

நீதி   வழுவாமல்   நன்மைகளைச்   செய்து  பிறருக்குப்   பயன்படப்
பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.
 

995.

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.
 

விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும்.
அறிவு    முதிர்ந்தவர்கள்,   பகைவரிடமும்    பண்புகெடாமல்    நடந்து
கொள்வார்கள்.