பக்கம் எண் :

திருக்குறள்201பொருள்

101. நன்றியில் செல்வம்
 

1001.

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்த தில்.
 

அடங்காத  ஆசையினால்  வீடு  கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச்
சேர்த்து  வைத்து   அதனை   அனுபவிக்காமல்   செத்துப்போகிறவனுக்கு.
அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?
 

1002.

பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு.
 

யாருக்கும் எதுவும்  கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம்
ஆகுமென்று,   அதனைவிடாமல்    பற்றிக்   கொண்டிருப்பவன்   எந்தச்
சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.
 

1003.

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை.
 

புகழை   விரும்பாமல்  பொருள்  சேர்ப்பது   ஒன்றிலேயே   குறியாக
இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.
 

1004.

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படா தவன்.
 

யாராலும்  விரும்பப்படாத  ஒருவன், தன்  மரணத்திற்குப் பிறகு எஞ்சி
நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?
 

1005.

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய

கோடியுண் டாயினும் இல்.
 

கொடுத்து  உதவும்  பண்பினால்  இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம்,
கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.