பக்கம் எண் :

குடியியல்202கலைஞர் உரை

1006.

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்

றீத லியல்பிலா தான்.
 

தானும்   அனுபவிக்காமல்   தக்கவர்களுக்கு   உதவிடும்    இயல்பும்
இல்லாமல்   வாழ்கிறவன்,     தன்னிடமுள்ள      பெருஞ்செல்வத்தைத்
தொற்றிக்கொண்ட நோயாவான்.
 

1007.

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.
 

வறியவர்க்கு  எதுவும்  வழங்கி  உதவாதவனுடைய  செல்வம்,  மிகுந்த
அழகியொருத்தி்,    தன்னந்தனியாகவே    இருந்து   முதுமையடைவதைப்
போன்றது.
 

1008.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.
 

வெறுக்கப்படுகிறவரிடம்  குவிந்துள்ள  செல்வமும்,  ஊர்  நடுவே நச்சு
மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!
 

1009.

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்.
 

அன்பெனும் பண்பை  அறவே  நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு,
அறவழிக்குப்   புறம்பாகச்  சேர்த்துக்   குவித்திடும்  செல்வத்தைப்  பிறர்
கொள்ளை கொண்டு போய்விடுவர்.
 

1010.

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனைய துடைத்து.
 

சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின்
நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.