பக்கம் எண் :

குடியியல்204கலைஞர் உரை

1016.

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்

பேணலர் மேலா யவர்.
 

பரந்த  இந்த  உலகில்  எந்தப்  பாதுகாப்பையும்விட,  நாணம்  எனும்
வேலியைத்தான்    உயர்ந்த    மனிதர்கள்,   தங்களின்   பாதுகாப்பாகக்
கொள்வார்கள்.
 

1017.

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.
 

நாண   உணர்வுடையவர்கள்   மானத்தைக்   காப்பாற்றிக்   கொள்ள
உயிரையும்    விடுவார்கள்.   உயிரைக்    காப்பாற்றிக்   கொள்வதற்காக
மானத்தை விடமாட்டார்கள்.
 

1018.

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்

அறநாணத் தக்க துடைத்து.
 

வெட்கப்படவேண்டிய  அளவுக்குப்  பழிக்கு ஆளானவர்கள் அதற்காக
வெட்கப்படாமல்  இருந்தால் அவர்களை  விட்டு  அறநெறி  வெட்கப்பட்டு
அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.
 

1019.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை
 

கொண்ட  கொள்கையில்   தவறினால்   குலத்துக்கு  இழுக்கு  நேரும்.
அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.
 

1020.

நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று.
 

உயிர்  இருப்பது  போலக்   கயிறுகொண்டு   ஆட்டி   வைக்கப்படும்
மரப்பொம்மைக்கும்,  மனத்தில்  நாணமெனும்  ஓர்   உணர்வு  இல்லாமல்
உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.