103. குடிசெயல் வகை |
1021. | கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் |
| பெருமையிற் பீடுடைய தில். |
|
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது. |
1022. | ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின் |
| நீள்வினையான் நீளும் குடி. |
|
ஆழ்ந்த அறிவும் விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால் அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும். |
1023. | குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் |
| மடிதற்றுத் தான்முந் துறும். |
|
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும். |
1024. | சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத் |
| தாழா துஞற்று பவர்க்கு. |
|
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும். |
1025. | குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் |
| சுற்றமாச் சுற்றும் உலகு. |
|
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள். |