104. உழவு |
1031. | சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் |
| உழந்தும் உழவே தலை. |
|
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. |
1032. | உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா |
| தெழுவாரை எல்லாம் பொறுத்து. |
|
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும். |
1033. | உழதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் |
| தொழுதுண்டு பின்செல் பவர். |
|
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. |
1034. | பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் |
| அலகுடை நீழ லவர். |
|
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள். |
1035. | இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது |
| கைசெய்தூண் மாலை யவர். |
|
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார். |