1. வழிபாடு |
1. | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி |
| பகவன் முதற்றே உலகு. |
|
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. |
2. | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் |
| நற்றாள் தொழாஅர் எனின். |
|
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை. |
3. | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் |
| நிலமிசை நீடுவாழ் வார். |
|
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். |
4. | வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு |
| யாண்டும் இடும்பை இல. |
|
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. |
5. | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் |
| பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. |
|
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். |