பக்கம் எண் :

குடியியல்214கலைஞர் உரை

1066.

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்

கிரவின் இளிவந்த தில்.
 

தாகம் கொண்டு  தவிக்கும் ஒரு  பசுவுக்காகத்  தண்ணீர் வேண்டுமென
இரந்து கேட்டாலும்கூட, அப்படிக்கேட்கும் நாவுக்கு,  அதைவிட இழிவானது
வேறொன்றுமில்லை.
 

1067.

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற்

கரப்பார் இரவன்மின் என்று.
 

கையில்   உள்ளதை  மறைத்து  'இல்லை'  என்போரிடம்   கையேந்த
வேண்டாமென்று  கையேந்துபவர்களை  யெல்லாம்  கையேந்திக்  கேட்டுக்
கொள்கிறேன்.
 

1068.

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.
 

இருப்பதை  மறைத்து  இல்லையென்று  கூறும்   கல்  நெஞ்சின்  மீது,
இரத்தல்   எனப்படும்   பாதுகாப்பற்ற   தோணி   மோதினால்   பிளந்து
நொறுங்கிவிடும்.
 

1069.

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
 

இரந்து  வாழ்வோர்  நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது,
இருப்பதைக்  கொடுக்க   மனமின்றி  மறைத்து  வாழ்பவரை  நினைத்தால்
உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.
 

1070.

கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.
 

இருப்பதை  ஒளித்துக்கொண்டு  'இல்லை'  என்பவர்களின்  சொல்லைக்
கேட்டவுடன்,   இரப்போரின்   உயிரே   போய்   விடுகிறதே;  அப்படிச்
சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?