பக்கம் எண் :

திருக்குறள்215பொருள்

108. கயமை
 

1071.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்.
 

குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப்  போலக்
காட்டிக் கொள்வார். மனிதர்களிடம்  மட்டும்தான்  இப்படி  இருவகையான
நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.
 

1072.

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத் தவலம் இலர்.
 

எப்போதும்    நல்லவை   பற்றியே    சிந்தித்துக்    கவலைப்பட்டுக்
கொண்டிருப்பவர்களைவிட   எதைப்  பற்றியும்   கவலைப்படாமலிருக்கும்
கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!
 

1073.

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.
 

புராணங்களில்     வரும்       தேவர்களைப்      போல்    மனம்
விரும்பியதையெல்லாம்   செய்யக்கூடியவர்கள்   கயவர்கள்    என்பதால்,
இருவரையும் சமமாகக் கருதலாம்.
 

1074.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
 

பண்பாடு  இல்லாத   கயவர்கள்,   தம்மைக்   காட்டிலும்   இழிவான
குணமுடையோரைக்  கண்டால்,  அவர்களை  விடத்  தாம்  சிறந்தவர்கள்
என்று கர்வம் கொள்வார்கள்.
 

1075.

அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
 

தாங்கள்   விரும்புவது   கிடைக்கும்   என்ற   நிலையேற்படும்போது
கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள்.
மற்ற  சமயங்களில்  அவர்கள்  பயத்தின்  காரணமாக  மட்டுமே  ஓரளவு
ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.