பக்கம் எண் :

குடியியல்216கலைஞர் உரை

1076.

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.
 

மறைக்கப்பட  வேண்டிய இரகசியம்  ஒன்றைக்  கேட்ட  மாத்திரத்தில்,
ஓடிச்  சென்று  பிறருக்குச்  சொல்லுகிற  கயவர்களைத்,  தமுக்கு என்னும்
கருவிக்கு ஒப்பிடலாம்.
 

1077.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்

கூன்கையர் அல்லா தவர்க்கு.
 

கையை  மடக்கிக்  கன்னத்தில்  ஒரு  குத்துவிடுகின்ற  முரடர்களுக்குக்
கொடுப்பார்களேயல்லாமல்,   ஈகைக்   குணமில்லாத   கயவர்கள்   ஏழை
எளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள்.
 

1078.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்.
 

குறைகளைச்  சொன்னவுடனே  சான்றோரிடம்  கோரிய பயனைப் பெற
முடியும்;   ஆனால்   கயவரிடமோ   கரும்பை  நசுக்கிப்  பிழிவதுபோல்,
போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.
 

1079.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.
 

ஒருவர்  உடுப்பதையும்  உண்பதையும்  கண்டுகூட பொறாமைப் படுகிற
கயவன்,  அவர்மீது  வேண்டு  மென்றே  குற்றம்  கூறுவதில் வல்லவனாக
இருப்பான்.
 

1080.

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்

விற்றற் குரியர் விரைந்து.
 

ஒரு   துன்பம்   வரும்போது   அதிலிருந்து   தப்பித்துக்   கொள்ள,
தம்மையே   பிறரிடம்   விற்றுவிடுகிற    தகுதிதான்    கயவர்களுக்குரிய
தகுதியாகும்.