109. தகை அணங்குறுத்தல் |
1081. | அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை |
| மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. |
|
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம். |
1082. | நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு |
| தானைக்கொண் டன்ன துடைத்து. |
|
அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது, தானொருத்தி மட்டும் தாக்குவது போதா தென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது. |
1083. | பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் |
| பெண்டகையால் பேரமர்க் கட்டு. |
|
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை. |
1084. | கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் |
| பேதைக் கமர்த்தன கண். |
|
பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு? |
1085. | கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் |
| நோக்கமிம் மூன்றும் உடைத்து. |
|
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே. |