1096. | உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் |
| ஒல்லை உணரப் படும். |
|
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும். |
1097. | செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் |
| உறாஅர்போன் றுற்றார் குறிப்பு. |
|
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும். |
1098. | அசையியற் குண்டாண்டோர் ஏர்யான் நோக்கப் |
| பசையினள் பைய நகும். |
|
நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள். |
1099. | ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் |
| காதலார் கண்ணே உள. |
|
காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர். |
1100. | கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் |
| என்ன பயனும் இல. |
|
ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன. |