பக்கம் எண் :

களவியல்222கலைஞர் உரை

1106.

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்

கமிழ்தின் இயன்றன தோள்.
 

இந்த   இளமங்கையைத்    தழுவும்  போதெல்லாம்   நான்  புத்துயிர்
பெறுவதற்கு  இவளின்  அழகிய  தோள்கள்  அமிழ்தத்தினால்  ஆனவை
என்பதுதான் காரணம் போலும்.
 

1107.

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.
 

தானே  உழைத்துச்  சேர்த்ததைப்  பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு
களிப்பதில்   ஏற்படும்  இன்பம்,   தனது  அழகிய  காதல்  மனைவியைத்
தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.
 

1108.

வீழும் இருவர்க் கினிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.
 

காதலர்க்கு  மிக   இனிமை  தருவது,  காற்றுகூட  இடையில்  நுழைய
முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.
 

1109.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.
 

ஊடல்   கொள்வதும்,  அதனால்   விளையும்   இன்பம்  போதுமென
உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப்புணர்ந்து மயங்குவதும் காதல்
வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.
 

1110.

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.
 

மாம்பழ  மேனியில்  அழகிய  அணிகலன்கள்   பூண்ட  மங்கையிடம்
இன்பம்   நுகரும்   போதெல்லாம்   ஏற்படும்   காதலானது,   இதுவரை
அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.