112. நலம் புனைந்து உரைத்தல் |
1111. | நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் |
| மென்னீரள் யாம்வீழ் பவள். |
|
அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி. |
1112. | மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் |
| பலர்காணும் பூவொக்கும் என்று. |
|
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது. |
1113. | முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் |
| வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. |
|
முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி! |
1114. | காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் |
| மாணிழை கண்ணொவ்வேம் என்று. |
|
என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், "இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!" எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும். |
1115. | அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு |
| நல்ல படாஅ பறை. |
|
அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான். |