பக்கம் எண் :

களவியல்226கலைஞர் உரை

1126.

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்

நுண்ணியர்எம் காத லவர்.

 

காதலர், கண்ணுக்குள்ளிருந்து  எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி
இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
 

1127.

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக் கறிந்து.

 

காதலர்  கண்ணுக்குள்ளேயே  இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால்
எங்கே  மறைந்துவிடப்   போகிறாரோ   எனப்  பயந்து  மை  தீட்டாமல்
இருக்கிறேன்.
 

1128.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து.

 

சூடான    பண்டத்தைச்    சாப்பிட்டால்   நெஞ்சுக்குள்   இருக்கின்ற
காதலருக்குச்  சுட்டுவிடும்   என்று  அஞ்சுகின்ற  அளவுக்கு  நெஞ்சோடு
நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
 

1129.

இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னுமிவ் வூர்.

 

கண்ணுக்குள்  இருக்கும்  காதலர்  மறைவார்  என  அறிந்து கண்ணை
இமைக்காமல்   இருக்கின்றேன்;  அதற்கே   இந்த  ஊர்   தூக்கமில்லாத
துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லாதவர் என்று அவரைக் கூறும்.
 

1130.

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னுமிவ் வூர்.

 

காதலர்,     எப்போதும்    உள்ளத்தோடு    உள்ளமாய்   வாழ்ந்து
கொண்டிருக்கும்போது,     அதை   உணராத    ஊர்மக்கள்   அவர்கள்
ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.