பக்கம் எண் :

திருக்குறள்227இன்பம்

114. நாணுத் துறவுரைத்தல்
 

1131.

காமம் உழந்து வருந்தினார்க் கேம

மடலல்ல தில்லை வலி.

 

காதலால்   துன்புறும்  காளையொருவனுக்குப்  பாதுகாப்பு  முறையாக,
மடலூர்தலைத் தவிர, வலிமையான துணை வேறு எதுவுமில்லை.
 

1132.

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து.

 

எனது  உயிரும்,  உடலும்  காதலியின்  பிரிவைத்  தாங்க  முடியாமல்
தவிப்பதால்,  நாணத்தைப்   புறந்தள்ளிவிட்டு  மடலூர்வதற்குத்  துணிந்து
விட்டேன்.
 

1133.

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்.

 

நல்ல  ஆண்மையையும்,  நாண  உணர்வையும்  முன்பு கொண்டிருந்த
நான்,   இன்று     அவற்றை     மறந்து,    காதலுக்காக   மடலூர்வதை
மேற்கொண்டுள்ளேன்.
 

1134.

காமக் கடும்புனால் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை என்னும் புணை.

 

காதல்  பெருவெள்ளமானது  நாணம்,   நல்ல  ஆண்மை  எனப்படும்
தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.
 

1135.

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.

 

மேகலையையும்  மெல்லிய  வளையலையும்  அணிந்த  மங்கை மாலை
மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும்  வேலையையும் எனக்குத்
தந்து விட்டாள்.