1146. | கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் |
| திங்களைப் பாம்புகொண் டற்று. |
|
காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் "கிரகணம்" எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர்முழுவதும் அலராகப் பரவியது. |
1147. | ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் |
| நீராக நீளுமிந் நோய். |
|
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது. |
1148. | நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் |
| காமம் நுதுப்பேம் எனல். |
|
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும். |
1149. | அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார் |
| பலர்நாண நீத்தக் கடை. |
|
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?. |
1150. | தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் |
| கௌவை எடுக்குமிவ் வூர். |
|
யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார். |