116. பிரிவு ஆற்றாமை |
1151. | செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் |
| வல்வரவு வாழ்வார்க் குரை. |
|
பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள். |
1152. | இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் |
| புன்கண் உடைத்தால் புணர்வு. |
|
முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல்தழுவிக் களிக்கும்போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது! |
1153. | அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் |
| பிரிவோ ரிடத்துண்மை யான். |
|
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்து செல்ல நேரிடுவதால்; "பிரிந்திடேன்" என அவர் கூறுவதை உறுதி செய்திட இயலாது. |
1154. | அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் |
| தேறியார்க் குண்டோ தவறு. |
|
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப் பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்? |
1155. | ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் |
| நீங்கின் அரிதால் புணர்வு. |
|
காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலிலேயே காத்துக் கொள்ள வேண்டும். |