பக்கம் எண் :

களவியல்232கலைஞர் உரை

1156.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.

 

போய்  வருகிறேன்  என்று  கூறிப்  பிரிகிற  அளவுக்குக்  கல் மனம்
கொண்டவர்  திரும்பி  வந்து  அன்பு காட்டுவார் என  ஆவல் கொள்வது
வீண்.
 

1157.

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

 

என்னை  விட்டுத்  தலைவன்  பிரிந்து  சென்றுள்ள  செய்தியை  என்
முன்கை  மூட்டிலிருந்து   கழன்று  விழும்  வளையல்  ஊரறியத்  தூற்றித்
தெரிவித்து விடுமே!
 

1158.

இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்

இன்னா தினியார்ப் பிரிவு.

 

நம்மை  உணர்ந்து  அன்பு  காட்டுபவர்  இல்லாத   ஊரில்  வாழ்வது
துன்பமானது;  அதைக்  காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து
வாழ்வது.
 

1159.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

 

ஒருவரை  யொருவர்  காணாமல்  தொடாமலும்  பிரிந்திருக்கும் போது
காதல்  நோய்  உடலையும்   உள்ளத்தையும்   சுடுவது  போன்ற   நிலை
நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!
 

1160.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.

 

காதலர் பிரிந்து  செல்வதற்கு  ஒப்புதல்  அளித்து,  அதனால் ஏற்படும்
துன்பத்தைப்  போக்கிக்  கொண்டு,   பிரிந்த   பின்னும்   பொறுத்திருந்து
உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?