பக்கம் எண் :

திருக்குறள்233இன்பம்

117. படர்மெலிந் திரங்கல்
 

1161.

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்

கூற்றுநீர் போல மிகும்.

 

இறைக்க  இறைக்கப்  பெருகும்  ஊற்றுநீர்  போல,  பிறர்  அறியாமல்
மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.
 

1162.

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்

குரைத்தலும் நாணுத் தரும்.

 

காதல்  நோயை   என்னால்   மறைக்கவும்   முடியவில்லை;  இதற்குக்
காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.
 

1163.

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்

நோனா உடம்பின் அகத்து.

 

பிரிவைத்  தாங்கமுடியாது  உயிர்  துடிக்கும் என் உடலானது, ஒருபுறம்
காதல் நோயும் மறுபுறம்  அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு
காவடி போல விளங்குகிறது.
 

1164.

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல்.

 

காதல்  கடல்போலச்  சூழ்ந்துகொண்டு  வருத்துகிறது.  ஆனால் அதை
நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை.
 

1165.

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர்.

 

நட்பாக   இருக்கும்போதே  பிரிவுத்துயரை   நமக்குத்   தரக்கூடியவர்,
பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?