பக்கம் எண் :

களவியல்240கலைஞர் உரை

1196.

ஒருதலையான் இன்னாது காமங்காப் போல

இருதலை யானும் இனிது.

 

காவடித்  தண்டின்  இரண்டு   பக்கங்களும்   ஒரே  அளவு  கனமாக
இருப்பதுபோல்,  காதலும்  ஆண்,  பெண்  எனும்  இருவரிடத்திலும் மலர
வேண்டும்;  ஒரு   பக்கம்  மட்டுமே  ஏற்படும்  காதலால்  பயனுமில்லை;
துயரமும் உருவாகும்.
 

1197.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான்.

 

காமன், ஒரு  பக்கமாக  மட்டும்  இருப்பதால், என்னைக் காதல் நோய்
வருத்துவதையும்,   என்   மேனியில்   பசலை    படர்வதையும்   கண்டு
கொள்ளமாட்டான் போலும்!
 

1198.

வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

 

பிரிந்து  சென்ற  காதலரிடமிருந்து   ஓர்   இனிய  சொல்கூட  வராத
நிலையில்,  உலகில்  வாழ்கின்றவரைப்  போல்,  கல் நெஞ்சம் உடையவர்
யாரும் இருக்க முடியாது.
 

1199.

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்

டிசையும் இனிய செவிக்கு.

 

என்  அன்புக்குரியவர்  என்னிடம்  அன்பு  காட்டாதவராகப்  பிரிந்து
இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.
 

1200.

உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு.

 

நெஞ்சமே!  நீ  வாழ்க!   உன்னிடம்  அன்பு  இல்லாதவரிடம்  உனது
துன்பத்தைச்  சொல்லி   ஆறுதல்   பெறுவதைக்   காட்டிலும்   கடலைத்
தூர்ப்பது எளிதான வேலையாகும்.