பக்கம் எண் :

திருக்குறள்241இன்பம்

121. நினைந்தவர் புலம்பல்
 

1201.

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.

 

உண்டபோது   மட்டும்   மகிழ்ச்சி  தரும்  கள்ளைவிட நினைத்தாலே
நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.
 

1202.

எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன் றில்.

 

விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய
துன்பம் வருவதில்லை. எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.
 

1203.

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்.

 

வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே
என்   காதலரும்    என்னை    நினைப்பது   போலிருந்து,  நினைக்காது
விடுகின்றாரோ?
 

1204.

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்

தோஒ உளரே அவர்.

 

என்  நெஞ்சைவிட்டு  நீங்காமல்  என் காதலர் இருப்பது போல, அவர்
நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?
 

1205.

தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத் தோவா வரல்.

 

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில்
மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக  வெட்கப்படமாட்டார்
போலும்.