பக்கம் எண் :

கற்பியல்242கலைஞர் உரை

1206.

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்

உற்றநாள் உள்ள உளேன்.

 

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத்  தான் உயிரோடு
இருக்கிறேன். வேறு எதை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?
 

1207.

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.

 

மறதி  என்பதே  இல்லாமல்   நினைத்துக்  கொண்டிருக்கும் பொழுதே
பிரிவுத்துன்பம்  சுட்டுப்   பொசுக்குகிறதே!  நினைக்காமல் மறந்துவிட்டால்
என்ன ஆகுமோ?
 

1208.

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு.

 

எவ்வளவு   அதிகமாக   நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது
சினம்    கொள்ளமாட்டார்.   அவர்   எனக்குச்  செய்யும் பெரும் உதவி
அதுவல்லவா?
 

1209.

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை ஆற்ற நினைந்து.

 

"நாம்    ஒருவரே;   வேறு    வேறு   அல்லர்" எனக்கூறிய காதலர்
இரக்கமில்லாதவராக     என்னைப்   பிரிந்து   சென்றுள்ளதை நினைத்து
வருந்துவதால்    என்னுயிர்    கொஞ்சம்    கொஞ்சமாகப்      போய்க்
கொண்டிருக்கிறது.
 

1210.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி.

 

நிலவே!  நீ  வாழ்க;    இணைபிரியாமலிருந்து,   பிரிந்து  சென்றுள்ள
காதலரை   நான்  என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ
மறையாமல் இருப்பாயாக.