பக்கம் எண் :

திருக்குறள்243இன்பம்

122. கனவுநிலை உரைத்தல்
 

1211.

காதலர் தூதொடு வந்த கனவினுக்

கியாதுசெய் வேன்கொல் விருந்து.

 

வந்த  கனவு  காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக்
கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?
 

1212.

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்

குயலுண்மை சாற்றுவேன் மன்.

 

நான்    வேண்டுவதற்கு  இணங்கி   என் மை எழுதிய கயல் விழிகள்
உறங்கிடுமானால், அப்போது என் கனவில்   வரும்    காதலர்க்கு   நான்
இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.
 

1213.

நனவினான் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.

 

நனவில்  வந்து  அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான்
இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
 

1214.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.

 

நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத்  தேடிக் கொண்டு
வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.
 

1215.

நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.

 

காதலரை    நேரில்   கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது
போலவே, இப்போது  அவரைக்  கனவில்  காணும்   இன்பமும்  இனிமை
வழங்குகிறது!