124. உறுப்புநலன் அறிதல் |
1231. | சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி |
| நறுமலர் நாணின கண். |
|
பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன. |
1232. | நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் |
| பசந்து பனிவாரும் கண். |
|
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன. |
1233. | தணந்தமை சால அறிவிப்ப போலும் |
| மணந்தநாள் வீங்கிய தோள். |
|
தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும். |
1234. | பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் |
| தொல்கவின் வாடிய தோள். |
|
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் சுழன்று விழுகின்றன, காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக. |
1235. | கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு |
| தொல்கவின் வாடிய தோள். |
|
வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன. |