1236. | தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் |
| கொடியார் எனக்கூறல் நொந்து. |
|
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன். |
1237. | பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் |
| வாடுதோட் பூசல் உரைத்து. |
|
நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கு வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ? |
1238. | முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது |
| பைந்தொடிப் பேதை நுதல். |
|
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டுவிட்டது. |
1239. | முயங்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற |
| பேதை பெருமழைக் கண். |
|
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதி காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன. |
1240. | கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே |
| ஒண்ணுதல் செய்தது கண்டு. |
|
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்து விட்டது. |