127. அவர்வயின் விதும்பல் |
1261. | வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற |
| நாளொற்றித் தேய்ந்த விரல். |
|
வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன. |
1262. | இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல் |
| கலங்கழியும் காரிகை நீத்து. |
|
காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி. |
1263. | உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் |
| வரல்நசைஇ இன்னும் உளேன். |
|
ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன். |
1264. | கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் |
| கோடுகொ டேறுமென் நெஞ்சு. |
|
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது. |
1265. | காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் |
| நீங்குமென் மென்தோள் பசப்பு. |
|
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும். |