பக்கம் எண் :

கற்பியல்256கலைஞர் உரை

1276.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

அன்பின்மை சூழ்வ துடைத்து.

 

ஆரத்  தழுவி  அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது
மீண்டும்   அவர்  என்னைப்   பிரிந்து   செல்லப்   போகிற   குறிப்பை
உணர்த்துவது போல் இருக்கிறதே.
 

1277.

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை.

 

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது,
உள்ளத்தால் பிரியும் நினைவு  கொண்டதை  என்  வளையல்கள்  எனக்கு
முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!
 

1278.

நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்

எழுநாளேம் மேனி பசந்து.

 

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்;  எனினும்,  பல  நாட்கள்
கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக்  கொண்டதே.
 

1279.

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண் டவள்செய் தது.

 

பிரிவு  காரணமாகக்   கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக்
கூடிய மென்மையான தோளையும்   நோக்கியவள்  காதலனைத் தொடர்ந்து
செல்வதென்ற    முடிவைத்    தன்   அடிகளை   நோக்கும்   குறிப்பால்
உணர்த்தினாள்.
 

1280.

பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.

 

காதல்  வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு
இரந்து நிற்கும்போது   பெண்மைக்குப்  பெண்மை   சேர்த்தாற்  போன்று
இருக்கின்றது.