பக்கம் எண் :

திருக்குறள்257இன்பம்

129. புணர்ச்சி விதும்பல்
 

1281.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

 

மதுவை  அருந்தினால்தான்  இன்பம், ஆனால்,  காதல்  அப்படியல்ல;
நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.
 

1282.

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்

காமம் நிறைய வரின்.

 

பனையளவாகக்    காதல்   பெருகிடும்   போது தினையளவு ஊடலும்
கொள்ளாமல் இருக்க வேண்டும்.
 

1283.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

காணா தமையல கண்.

 

என்னை   அரவணைக்காமல்   தமக்கு  விருப்பமானவற்றையே செய்து
கொண்டிருந்தாலும், என்   கண்கள்    அவரைக்    காணாமல்  அமைதி
அடைவதில்லை.
 

1284.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றதென் னெஞ்சு.

 

ஊடுவதற்காகச்    சென்றாலும்கூட    அதை நெஞ்சம் மறந்து விட்டுக்
கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.
 

1285.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து.

 

கண்ணில்   மை  தீட்டித்   கொள்ளும்  பொழுது அந்த மை தீட்டும்,
கோலைக்    காணாதது    போலவே, காதலனைக் காணும்பொழுது அவன்
என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.