பக்கம் எண் :

பாயிரம்6கலைஞர் உரை

26.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

 

பெருமை   தரும்   செயல்களைப்  புரிவோரைப்  பெரியோர் என்றும்,
சிறுமையான   செயல்களையன்றிப்      பெருமைக்குரிய    செயல்களைச்
செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
 

27.

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

 

ஐம்புலன்களின்   இயல்பை  உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன்
கொண்டவனையே உலகம் போற்றும்.
 

28.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

 

சான்றோர்களின்   பெருமையை, இந்த உலகில்  அழியாமல்  நிலைத்து
நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
 

29.

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிது.

 

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம்
அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
 

30.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.

 

அனைத்து   உயிர்களிடத்திலும்  அன்புகொண்டு   அருள்  பொழியும்
சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.