பக்கம் எண் :

கற்பியல்258கலைஞர் உரை

1286.

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை.

 

அவரைக்    காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை;
அவரைக்   காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும்
நான் காண்பதில்லை.
 

1287.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து.

 

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில்
குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப்  புரிந்திருந்தும்,   ஊடல்
கொள்வதால் பயன் என்ன?
 

1288.

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு.

 

என்னுள்ளம்   கவர்ந்த    கள்வனே! இழிவு தரக் கூடிய துன்பத்தை நீ
எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும்  மேலும்
அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச்
செய்கிறது உன் மார்பு.
 

1289.

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார்.

 

காதல்      இன்பம், மலரைவிட மென்மையானது.  அதனை    அதே
மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.
 

1290.

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்

என்னினும் தான்விதுப் புற்று.

 

விழிகளால்   ஊடலை   வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக்
காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.