பக்கம் எண் :

கற்பியல்260கலைஞர் உரை

1296.

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு.

 

காதலர்   பிரிவைத்   தனியே இருந்து நினைத்த போது என் நெஞ்சம்
என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
 

1297.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்

மாணா மடநெஞ்சிற் பட்டு.

 

அவரை    மறக்க  முடியாமல்  வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட
நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாத நாணத்தையும் மறந்து விட்டேன்.
 

1298.

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

 

பிரிந்து   சென்ற  காதலரை  இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால்,
அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக்
கொண்டிருக்கும்.
 

1299.

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி.

 

துன்பம் வரும்போது அதனைத்  தாங்குவதற்கு  நெஞ்சமே  துணையாக
இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?
 

1300.

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

 

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத   போது,   மற்றவர்
உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.