பக்கம் எண் :

கற்பியல்262கலைஞர் உரை

1306.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.

 

பெரும்பிணக்கும்,   சிறுபிணக்கும்   ஏற்பட்டு   இன்பம்  தரும் காதல்
வாழ்க்கை அமையாவிட்டால்  அது  முற்றிப்  பழுத்து   அழுகிய   பழம்
போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.
 

1307.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்றுகொல் என்று.

 

கூடி  முயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து
விடுமோ  என  எண்ணுவதால்  ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு
உண்டு.
 

1308.

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்

காதலர் இல்லா வழி.

 

நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர்
இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?
 

1309.

நீரும் நிழல தினிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது.

 

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான்  குளிர்ந்து  இனிமையாக  இருக்கும்;
அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும்  ஊடல்தான்   இன்பமானதாக
இருக்கும்.
 

1310.

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்

கூடுவேம் என்ப தவா.

 

ஊடலைத்   தணிக்காமல்   வாடவிட்டு    வேடிக்கை  பார்ப்பவருடன்
கூடியிருப்போம் என்று என் நெஞ்சம்  துடிப்பதற்கு   அதன்   அடங்காத
ஆசையே காரணம்.