133. ஊடலுவகை |
1321. | இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் |
| வல்ல தவரளிக்கும் ஆறு. |
|
எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது. |
1322. | ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி |
| வாடினும் பாடு பெறும். |
|
காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும். |
1323. | புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு |
| நீரியைந் தன்னார் அகத்து. |
|
நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா? |
1324. | புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் |
| உள்ளம் உடைக்கும் படை. |
|
இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது. |
1325. | தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் |
| அகறலின் ஆங்கொன் றுடைத்து. |
|
தவறே செய்யாத நிலையிலும்கூட, தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது. |