1326. | உணலினும் உண்ட தறலினிது காமம் |
| புணர்தலின் ஊடல் இனிது. |
|
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம். |
1327. | ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் |
| கூடலிற் காணப் படும். |
|
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும்போது உணரப்படும். |
1328. | ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் |
| கூடலில் தோன்றிய உப்பு. |
|
நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெறமுடியுமல்லவா? |
1329. | ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப |
| நீடுக மன்னோ இரா. |
|
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கு இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக. |
1330. | ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் |
| கூடி முயங்கப் பெறின். |
|
ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான். |