46. | அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் |
| போஒய்ப் பெறுவ தெவன். |
|
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது. |
47. | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் |
| முயல்வாருள் எல்லாம் தலை. |
|
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான். |
48. | ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை |
| நோற்பாரின் நோன்மை உடைத்து. |
|
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும். |
49. | அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் |
| பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. |
|
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும். |
50. | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் |
| தெய்வத்துள் வைக்கப் படும். |
|
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். |