6. வாழ்க்கைத் துணைநலம் |
51. | மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் |
| வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. |
|
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள். |
52. | மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை |
| எனைமாட்சித் தாயினும் இல். |
|
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது. |
53. | இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் |
| இல்லவள் மாணாக் கடை. |
|
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது. |
54. | பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் |
| திண்மைஉண் டாகப் பெறின். |
|
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது? |
55. | தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் |
| பெய்யெனப் பெய்யும் மழை. |
|
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள். |