பக்கம் எண் :

இல்லறவியல்12கலைஞர் உரை

56.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

 

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு,தமக்குப்
பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல்
இருப்பவள் பெண்.
 

57.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.

 

தம்மைத்  தாமே  காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை
அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
 

58.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.

 

நற்பண்பு   பெற்றவனைக்   கணவனாகப்   பெற்றால்,    பெண்டிர்க்கு
இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.
 

59.

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.

 

புகழுக்குரிய   இல்வாழ்க்கை  அமையாதவர்கள்,   தம்மைப்  பழித்துப்
பேசுவோர்   முன்பு   தலைநிமிர்ந்து   நடக்க  முடியாமல் குன்றிப் போய்
விடுவார்கள்.
 

60.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

 

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு  மேலும்
சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.