பக்கம் எண் :

இல்லறவியல்16கலைஞர் உரை

76.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.

 

வீரச்   செயல்களுக்கும்   அன்பு    துணையாகத் திகழ்கிறது என்பதை
அறியாதவர்களே,   அறச்   செயல்களுக்கு  மட்டுமே  அன்பு துணையாக
இருப்பதாகக் கூறுவார்கள்.
 

77.

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

 

அறம்  எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது
மனச்சாட்சியே  வாட்டி  வதைக்கும்.  அது  வெயிலின் வெம்மை புழுவை
வாட்டுவதுபோல இருக்கும்.
 

78.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.

 

மனத்தில்  அன்பு  இல்லாதவருடைய  வாழ்க்கை,  பாலை  வானத்தில்
பட்டமரம் தளிர்த்தது போன்றது.
 

79.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப் பன்பி லவர்க்கு.

 

அன்பு  எனும்  அகத்து  உறுப்பு  இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள்
அழகாக இருந்து என்ன பயன்?
 

80.

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

 

அன்புநெஞ்சத்தின்   வழியில்   இயங்குவதே   உயிருள்ள உடலாகும்;
இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.