பக்கம் எண் :

4

வாயுறையாம் வள்ளுவன்தரு முப்பால் வாய்ப்பினும்

தொல்லறநூல் உரைகண்ட பதின்மர் தாமும்

தத்தமது சமயமத வண்ணம் குழைந்திடவும்

ஆத்திகஞ்சார் வடமொழி விரவிடவுஞ் செய்ததால்

குறள்நெறித் தனித்தகவு புலப்படுத்தா ரல்லர்.
 

இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி விளைவால்

உரைகண்ட இணையிலாப் புலவரோ பலப்பலர்!

அவர்தம் பெயர்களோ விரிக்கினும் எஞ்சும்!

ஆய்வுசெய் நோக்கில் வரைந்தவர் சிலரெனினும்

புதிய சிந்தையைத் தூண்டுவ உண்டெனினும்

படிந்தபழமைச் சார்பைத் துடைத்திட ஒல்லாததும்

துடைத்திடத் தலைப்படின் ஏற்புடைத்தா காததுமாய்

வள்ளுவர் திருவுரு வரைவார்கற்பனை யானதுபோல்

வள்ளுவச் சிந்தனையும் கொண்டவர் 'காட்சி' யானது,
 

எவ்வெவர் உரைதனைப் பயில்வோ ராயினும்

அவ்வுரை மெய்ப்பொருள் தேரும் ஆர்வத்தில்

பொய்யா மொழிதனைப் பகுத்தறிந் திடலால்

மெய்மை காணுந்திறனு முயர்ந்தது நாளும்!
 

திருக்குறள் வகுத்திட்ட வாழ்க்கை நெறியொன்றே

திருவிடத்தின் பண்பாட்டு ஊற்றுக்கண் ஆகலின்

திருமறை உரைபொருள் எவரும் எளிதுணர

திருக்குறள் கருத்துரை வரையலானார் கலைஞர்.
 

குறட்பா மொழிந்திடும் பொருளொன்றே எனினும்

குறள்பொருள் தெளிவார் உணர்திறன் வேறாகலின்

குறட்பா சொற்றொடர் புணர்வகை யாலன்றிக்

குறள்நெறி உளத்தூன்ற உரைதந்தார் கலைஞர்.